×

நெல்லை விடுதியில் நீலகிரி முன்னாள் டிஎஸ்பி திடீர் சாவு

நெல்லை, ஜன. 31: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் டிஎஸ்பி தர்மராஜ் (69). இவரது சொந்த ஊர் உடன்குடி அருகேயுள்ள வேப்பங்காடு கிராமம் ஆகும். இவருக்கு மனைவி செல்வசுந்தரி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவ்வப்போது தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
 இவரது சொந்த ஊரில் உள்ள நிலம் தொடர்பான வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் அவர் மாதம் ஒரு முறை நெல்லை சந்திப்பிலுள்ள விடுதியில் தங்கியிருந்து நீதிமன்றம் சென்று வந்தார். இதனிடையே தர்மராஜின் உறவினர் திருமணம் நேற்று சாத்தான்குளத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கோத்தகிரியிலிருந்து நேற்று முன்தினம் இரவு வந்த அவர் நெல்லை சந்திப்பில் வழக்கமாக தங்கும் விடுதியில் தங்கினார்.
 நேற்று காலை அவரது அறை திறக்கப்படவில்லை. இதனால் விடுதி ஊழியர் ஜன்னல் வழியாக பார்த்த போது அவரது வாயில் நுரை தள்ளியவாறு கட்டிலில் இறந்து கிடந்து தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை சந்திப்பு இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். தர்மராஜ் மாத்திரை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதில் இறந்தாரா அல்லது நெஞ்சுவலியால் இறந்தாரா என்பது குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று மாலை தர்மராஜின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படட்டது.

Tags : death ,Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்