×

உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின் சாதன பொருட்கள் வெடித்து சிதறியது: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்:  திருவொற்றியூரில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால்  அப்பகுதியில் பரபரப்பு ஏறபட்டது.   திருவொற்றியூர் அம்சா தோட்டம் 4வது தெருவை சேர்ந்தவர் சூரிய பாபு. முன்னாள் அதிமுக கவுன்சிலர். நேற்று முன்தினம் இரவு இவர் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென்று  வீட்டில் இருந்த டிவி, ஏசி போன்ற மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பீதியடைந்து வெளியே ஓடிவந்தனர்.  இதேபோல் பக்கத்தில் உள்ள சில வீடுகளிலும் அடுத்தடுத்து மின்சாதன பொருட்கள் வெடித்தது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள மின்சார பில்லர் பாக்சில்  பழுது காரணமாக உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது தெரியவந்தது.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் உயர் மின்னழுத்தம் காரணமாக, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகிறது. ஏற்கனவே இதுகுறித்து அஜாக்ஸ் மின்வாரிய அலுவலகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, ஒரே நேரத்தில் பல வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமாகி உள்ளன. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்,’’ என்றனர்.

Tags : Explosions ,
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்