×

தங்க கட்டிகள் விற்பனை செய்வதாக கூறி நகைக்கடை அதிபரிடம் ₹40 லட்சம் பறித்த தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது: 28 லட்சம், 2 கார்கள் பறிமுதல்

சென்னை: தங்க கட்டிகள் விற்பனை செய்வதாக கூறி நகைக்கடை அதிபரிடம் ₹40 லட்சம் கொள்ளையடித்து சென்ற தந்தை, மகன்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹28 லட்சம் மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் பிரவீன்குமார் (54), நகைக்கடை அதிபர். இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ரவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக ராஜா, கணேசன், பிரபாகர் மற்றும் அகமது ஷரீப் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
அப்போது, நகைக்கடை அதிபர் பிரவீன்குமாரிடம், இந்த 5 பேரும் தங்களுக்கு தெரிந்த முகமது என்பவரிடம் தங்க கட்டிகள் இருப்பதாகவும், போலீசார் கெடுபிடியால் அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதை வாங்குவதற்கு பிரவீன்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 24ம் தேதி 5 பேரும் ராயப்பேட்டை ஆர்கே.சாலை சிவசாமி தெருவில் உள்ள முகமது வீட்டிற்கு பிரேம்குமாரை அழைத்து சென்றனர். அங்கு முகமது ஒரு தங்க கட்டியை பிரவீன்குமாரிடம் காட்டினார். அதை பரிசோதனை செய்தபோது அது ஒரிஜினல் தங்கமாக இருந்துள்ளது. இதனால் அந்த தங்க கட்டிகள் அனைத்தையும் வாங்க நகைக்கடை அதிபர் பிரவீன்குமார் முடிவு செய்தார். பின்னர் அன்று இரவு ₹40 லட்சம் பணத்துடன் முகமது வீட்டிற்கு நண்பர்கள் 5 பேருடன் சென்றுள்ளார். அப்போது முகமதுவிடம் 40 லட்சத்தை கொடுத்து தங்க கட்டிகளை கேட்டுள்ளனர். உடனே முகமது வீட்டின் ஒரு அறையில் உட்கார வைத்துவிட்டு தங்க கட்டிகளை கொண்டு வருவதாக கூறிவிட்டு பணத்துடன் தலைமறைவானார். அவரை தேடுவதாக ரவி உள்பட 5 பேரும் மாயமாகினர்.

அவர்களை செல்போனில் தொடர்புகொண்ட போது, பதிலளிக்கவில்லை. அப்போதுதான், ஏமாற்றப்பட்டது பிரவீன்குமாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அந்த 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், மந்தைவெளி கற்பகம் அவென்யூவை சேர்ந்த முகமது சபீர் அலி (64), அவரது மகன்களான வியாகர் அலி (32), வகிப் அலி (31) மற்றும் முகமது சபீர் அலி நண்பரான அண்ணாநகர் கணபதி காலனியை சேர்ந்த யூசுப்கமால் (35)  ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதும்,  இதேபோல் பல நகைக்கடை உரிமையாளர்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது. பின்னர் அனைவரையும் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ேநற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28 லட்சம் மற்றும் 2 சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : sons ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...