×

தியாகிகள் சிலை உள்ள அரசு பள்ளியில் காந்தியின் நினைவு தினம் புறக்கணிப்பு

தர்மபுரி, ஜன.31:  பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கு, அவரது நினைவு நாளான நேற்று மாலை அணிவிக்காமல் புறக்கணிக்கப்பட்டது, தேசபக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் 60ம் ஆண்டு விழாவையொட்டி கடந்த ஆண்டு முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளி சீரமைக்கப்பட்டு பள்ளியில் நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பூங்கா, தேசத் தலைவர்களின் உருவ சிலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்தில் பாரதியார், வ.உ.சி புத்தர், காந்தி, நேரு, காமராஜர், பகத்சிங், சுப்பிரமணிய சிவா, பாரதமாதா உள்ளிட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஆனால், சமீபகாலமாக தேச தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் மற்றும் சுதந்திர தினம் குடியரசு தினம் ஆகிய தினங்களில் தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவு சின்னங்களுக்கு மரியாதை செலுத்தப்படுவதில்லை. மகாத்மா காந்தியின் 72வது ஆண்டு நினைவு தினமான நேற்று, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆளுயர காந்தி சிலைக்கு மாலை மரியாதை எதுவும் செலுத்தப்பட வில்லை. பள்ளி நிர்வாகத்தின் புறக்கணிப்பு, தேசபக்தர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Gandhi ,government school ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!