×

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி சீனாவில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

அறந்தாங்கி, ஜன.31: இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். இவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் சீனாவில் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர். தற்போது சீனாவில் வுகான் பகுதியில் மட்டுமே அதிக அளவு கொரோனா வைரஸின் பாதிப்பு இருந்து வருகிறது. அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானவர்கள் வுகான் பகுதியை கடந்து வேறு நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் படித்து வருவதால், அவர்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படவில்லை. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் மருந்து சீனாவில் கண்டுபிடிக்கப்படாததால், கொரோனா வைரஸ் அந்த நாட்டில் வேகமாக பரவிவருகிறது. இதனால் சீனாவில் படித்துவரும் வெளிநாட்டு மாணவர்களை, அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு சீனா அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து சீனாவில் படித்துவரும் மாணவர்கள் அந்நாட்டில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அவர்களை போல அறந்தாங்கி பகுதியில் இருந்து சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து வரும் 4க்கும் மேற்பட்ட மருத்துவபடிப்பு படித்துவரும் மாணவர்கள் சீனாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர். இதேபோல சீனாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடியைச் சேர்ந்த சங்கர் என்ற சந்திரசேகர் என்பவர் நேற்று காலை சொந்த ஊர் திரும்பினார்.

சீனாவில் இருந்து சொந்த ஊரான அறந்தாங்கி பகுதிக்கு திரும்பியவரை அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி உத்தரவின்பேரில் சுகாதாரத்துறையினர் நேரில் சென்று பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் சீனாவில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் தென்படவில்லை. இருப்பினும் சீனாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் குறைந்தது 28 நாட்கள் வீட்டிலேயே ஓய்வில் இருக்குமாறும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் அவர்களை 24 மணிநேரமும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி கூறியது: சீனாவில் இருந்து தாயகம் திரும்புவோர் குறித்த விபரங்களை விமான நிலையங்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைக்கும் பட்டியல்படி, நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி தென்படவில்லை. இருப்பினும் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதோடு, அவர்கள் 28 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரித்துள்ளோம். சீனாவில் இருந்து வருபவர்களை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

Tags : examination ,Aranthangi ,China ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு