×

நீடாமங்கலம் பகுதியில் கடும் தட்டுப்பாடு இயந்திர அறுவடைக்கு விலை நிர்ணயிக்காவிட்டால் மறியல்

நீடாமங்கலம், ஜன.31: நீடாமங்கலம் பகுதியில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், இயந்திர அறுவடைக்கு விலை நிர்ணயிக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியல் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையிலிருந்து காலத்தில் தண்ணீர் திறக்காததாலும் விவசாயிகள் சரியான நேரத்தில் சாகுபடி பணியை தொடங்க முடியாமல் கவலையில் இருந்தனர். இந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்தாலும், மூன்று முறை மேட்டூர் அணை நிறம்பியது. இதனால் விவசாயத்திற்கு தாமதமாக தட்டுப்பாடின்றி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு சம்பா மற்றும் தாளடிபணியை விவசாயிகள் தொடங்கினர். விவசாயிகள் நெற்பயிருக்கு சரியான உரங்களை இட்டு பராமரித்து பாதுகாத்து வரும் நிலையில், கடந்த மாதம் பெய்த பருவமழையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் சுமார் பல ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர்கள் மழை நீரில் மூழ்கி, சில இடங்களில் இளம் பயிர்கள் அழுகியது. சில இடங்களில் அழுகிய நெல்பயிரில் உள்ள தண்ணீரை வடியவைத்து, உடனே உரங்கள் தெளித்ததால் பயிர்கள் ஓரளவு நன்றாக வளர்ந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் காற்றுடன் பெய்த மழையால் சித்தமல்லி, நகர், அனுமந்தபுரம், பழங்களத்தூர், முல்லைவாசல், பெரம்பூர், ரிஷியூர், காரிச்சாங்குடி, கானூர் அன்னவாசல், ராஜப்பையன்சாவடி, மடப்புரம், மேலாளவந்தசேரி, அரிச்சபுரம் சித்தாம்பூர் வெள்ளக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் தரையோடு தரையாக படிந்து கிடப்பதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
கடந்த மாதம் பெய்த மழையில் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அதனை பாது காத்து அறுவடை செய்யும் நேரத்திலும் மழை பெய்ததால் அறுவடைகூட செய்ய முடியாத அளவிற்கு நெல்மணிகள் தரையில் படித்துள்ளது. இந்நிலையில் தற்போது அறுவடை செய்யும் நிலையில் அறுவடை இயந்நிர தட்டுபாடு ஏற்பட்டு மணிக்கு ரூ.2,500 முதல் 3,000வரை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

அவ்வாறு கொடுத்து அறுக்க தயார் நிலையில் விவசாயிகள் இருந்தாலும், இயந்திரம் வருவது தாமதமாக உள்ளது. இதனால் தரையில் படிந்துள்ள நெல்மணிகள் முளைத்து நாற்றுகளாக வந்து அறுவடைசெய்ய முடியாத நிலை உள்ளது. அதையும் மீறி அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது, அங்கு 100 குழி, 200 குழி சாகுபடி செய்த சிறு குறு விவசாயிகள் கூட கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கள் வாங்கி கொண்டு வந்தால்தான் நெல் கொள்முதல் செய்ய முடியும் என்று அங்குள்ள பிசி கூறி வருவதால் விவசாயிகளுக்கு அடி மேல் அடி விழுந்து விவசாயமும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டள்ளது.
எனவே திருவரூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஏற்கனவே பயிர் காப்பீடு செய்தபோது வாங்கிய சிட்டா அடங்கள் நகல்களை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என நீடாமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இயந்திர அறுவடைக்கு தமிழக அரசு மணிக்கு எவ்வளவு என நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நெல் மூட்டைகளை நீடாமங்கலம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுக்கி வைத்து மிகப்பெரிய சாலை மறியல் செய்யப்படும் என்றனர்.

Tags : shortage ,area ,Needamangalam ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...