×

விவசாயிகள் எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது

திருத்துறைப்பூண்டி, ஜன.31: திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு முதல் கூட்டம் ஒன்றியகுழு தலைவர் பாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் வக்கீல் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்எல்ஏ ஆடலரசன், தாசில்தார் ராஜன்பாபு, ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், மேலாளர் முருகானந்தம், பொறியாளர் சூரியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, அரசு போக்குரத்து கிளை மேலாளர் ஜெய்சங்கர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அனுமதிக்க கூடாது. டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்று சுயேட்சை உறுப்பினர் சுரேஷ் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கஜா புயலில் சிறப்பாக செயல்பட்ட தாசில்தார் ராஜன்பாபு, உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் நடத்தும் அலுவலர் நக்கீரன், ஊராட்சி ஒன்றிய மேலாளர் முருகானந்தம் ஆகியோருக்கு குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
கவுன்சிலர் முருகேசன்:  குரும்பல், குன்னூர், மணலி பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் சாலை வசதிகள், படித்துரைகள் கட்டிதரவேண்டும்.
கவுன்சிலர் ஞானமோகன்: பாமணி அத்திமடை பகுதியில் பேருந்துகள் நின்று மாணவர்களை ஏற்றிசெல்வதில்லை. சுந்தரபுரி தோப்படித்தெரு பகுதியில் ரேஷன் கடை அமைத்துதரவேண்டும்.
கவுன்சிலர் சுரேஷ் : கொக்காலடி பஸ் நிறுத்ததில் எந்த பேருந்தும் நிறுத்துவது இல்லை.
கவுன்சிலர் வேதரெத்தினம் :  கொருக்கை ஊராட்சி தலைக்காடு பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்திதர வேண்டும். கஜா புயலில் சேதமடைந்த வீடுகளுக்கு கான்கீரட் வீடு அமைத்துதர வேண்டும்.
கவுன்சிலர் கோபாலராமன் : திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் முழு சுகாதார திட்டத்தில் கீழ் நடைபெறும் தனிநபர் கழிப்பறை முறையாக நடைபெறவில்லை. பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டிதர தேர்வு செய்யும் பயனாளிகள் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. விளக்குடி பேருந்து நிறுத்ததில் பள்ளி நேரங்களில் பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்லவில்லை.

கவுன்சிலர் இந்திரா : கட்டிமேட்டில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டிதரவேண்டும். கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் உள்ளிட்ட மூன்று பஸ் நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்பதுகிடையாது.
கவுன்சிலர் சரஸ்வதி : நாகலுடையானிருப்பு பகுதியில் குடிவசதி, பகுதி நேர அங்காடி ஏற்பாடு செய்து தரவேண்டும். மேலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
கவுன்சிலர் சித்ரகலா : திருத்தங்கூர் பகுதியில் குடிவசதி, மேலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். திருத்தங்கூர் பகுதியில் குடிநீர் உப்பு தண்ணீயாக வருகிறது. அதனை ஆய்வு செய்து நல்ல குடிநீர் வழங்கவேண்டும்.
கவுன்சிலர் ஆரோக்கியமேரி : விட்டுகட்டி, வரம்பியத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி பேருந்து வசதிகள் செய்து தரவேண்டும், கவுன்சிலர் மன்மதன்:  கொத்தமங்கலம் கோட்டகம் பாலத்தை கட்டிதரவேண்டும். சிதம்பரகொத்தமங்கலம் சாலை, பள்ளங்கோவில் கீழத்தெரு சாலை சீரமைக்கவேண்டும். முருகம்பாளைத்தில் சமுதாய கூடம் கட்டிதரவேண்டும். பள்ளங்கோவில் பேருந்து நிறுத்ததில் பேருந்து நின்று மாணவர்களை ஏற்றி செல்வதில்லை.

கவுன்சிலர் பக்கிரியம்மாள்: கச்சனம் பகுதியில் குளம் தூர்வாரி படித்துரை கட்டித்தர வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரவேண்டும்.
கவுன்சிலர் மாரியம்மாள்: மேலமருதுர் பகுதியில் சாலை வசதி, படித்துறை கட்டிதரவேண்டும். வடபாதி பிச்சன்கோட்டகம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலமருதுர் வடக்கு தெரு பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் பத்மா: எழிலூர் பகுதியில் சால்வனாறு பகுதியில் ஏரி அமைக்க வேண்டும். தென்பாதியில் ஒரு ரேஷன் கடை அமைத்துதர வேண்டும். எழிலூர் சமுத்துவபுரத்தில் குளம் அமைக்க வேண்டும். எழிலூர் நேமம் பகுதியில் சுடுகாடு அமைத்துர வேண்டும்.
கவுன்சிலர் பிரேமா: பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரிசெய்ய வேண்டும். செட்டியமுலை பகுதியில் பேருந்து நிறுத்தம் கட்டிதர வேண்டும். பழுதடைந்த சாலைகளை சரிசெய்ய வேண்டும். பாலம் கட்டிதர வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

Tags : districts ,Delta ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!