×

கும்பகோணம் பாலக்கரையில் தினம்தோறும் போக்குவரத்து நெரிசல்

கும்பகோணம், ஜன. 31: கும்பகோணம் பாலக்கரையில் தினம்தோறும் காலை, மாலை வேலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் காமாட்சி ஜோசியர் சாலையை சீரமைக்க வேண்டும், போக்குவரத்து போலீசாரை அதிகளவில் நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள பாலக்கரை காவிரி ஆற்றின் வழியாக கடலூர், அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அணைக்கரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து குடந்தையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளும் மற்றும் வேலைக்காக ஏராளமானோர் வாகனங்களில் தினம்தோறும் வந்து செல்கின்றனர். மேலக்காவிரி ஆற்றுப்பாலம் வழியாக காமாட்சி ஜோசியர் தெரு சாலை குண்டும், குழியுமாக மாறி வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் இருப்பதால் திருவையாறு, கல்லணை உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் பாலக்கரை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றின் பாலக்கரையில் பாலத்தின் இறக்கத்தில் கும்பகோணம்,சென்னை, பூம்புகார், திருவையாறு, நீரத்தநல்லுார் உள்ளிட்ட 5 சாலை வழியாக ஊர்களுக்கு செல்லும் சாலைகள் பிரிகிறது. காலை நேரத்தில் 5 திசைகளில் இருந்தும் நிமிடத்துக்கு நிமிடம் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கும்பகோணத்துக்குள் நுழைவதால் நெரிசல் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கின்றது. மேலும் சென்னை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருவையாறு செல்லும் வெளியூர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் பாலத்தின் வழியாக செல்வதால் நகர முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி விடுவதால் நோயாளிகளும் பரிதவிக்கின்றனர்.

போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் நெரிசலை ஒழுங்குப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். 5 சாலைகளில் இருந்து வரும் வாகனங்களை சீர்படுத்துவதற்குள் சிரமத்துக்குள்ளாகி விடுகின்றனர். இந்நிலையில் நேற்று பாலக்கரை பாலத்தில் போக்குவரத்து நெரிசலாகி ஒரு மணி நேரத்துக்கு மேல் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் வரிசை கட்டி காத்திருந்ததால் பயணிகள், மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே கும்பகோணம் போக்குவரத்து காவல் துறைக்கு கூடுதலாக போலீசாரை நியமனம் செய்ய வேண்டும், காமாட்சி ஜோசியர் சாலையை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbakonam Palakkarai ,
× RELATED வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க...