×

தேவாமங்கலத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிக்கு வகுப்பறைகள் தேவை

ஜெயங்கொண்டம், ஜன.31: ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வகுப்பறைகள் தேவை என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புதிய கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், திருச்சி ஆவின் துணைத்தலைவர் தங்க பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புதிய கால்நடை கிளை நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நல்லமுத்து, ராஜேந்திரன், தா.பழூர் ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி, துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் ரூ.93 ஆயிரத்து 750 மதிப்பில் 25 கோழிகள் வீதம் 50 பேருக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டது. மேலும் 155 பேருக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.விழா முடிந்தபின் பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் எங்கள் பள்ளி நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தரம் உயர்த்திய பின்னும் அதே நடுநிலைப்பள்ளியில் வகுப்பில்தான் படித்து வருகிறோம். உயர்நிலைப் பள்ளிக்கு என தனி வகுப்பறைகள் இல்லை. எனவே எங்களுக்கு புதிய வகுப்பறைகள் கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் என கலெக்டர் கூறினார். முன்னதாக அரியலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஹமீது அலி வரவேற்றார். உதவி இயக்குனர் டாக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags : Demamangalam ,high school classrooms ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது