×

நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணி தீவிரம் நெல் ஈரப்பதம் 20 சதவீதமாக உயர்த்த வேண்டும்

நாகை, ஜன.31: நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை தீவிரமடைந்து வரும் நேரத்தில் ஈரப்பதத்தின் அளவை 20 சதவீதமாக தமிழகஅரசு உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இந்த பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். ஆனால், பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும் முப்போகம் சாகுபடி பொய்த்து போனது. தற்பொழுது ஒரு போகம் சாகுபடியே டெல்டா மாவட்டங்களில் கேள்விகுறியாக மாறி வருகிறது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆனால் கடும் வறட்சி காரணமாக வழக்கம்போல் கடந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் சம்பா சாகுபடியின் பரப்பளவு குறைந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது பல்வேறு தடைகளை தாண்டி கடைமடை பகுதியான நாகைக்கு வந்தது. இதைதொடர்ந்து நாகை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 404 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 95 ஆயிரத்து 354 எக்டேர் பரப்பளவில் சம்பாவும், 37 ஆயிரத்து 50 எக்டேர் பரப்பளவில் தாளடியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் 66 ஆயிரத்து 926 எக்டேர் பரப்பளவில் நேரடி விதைப்பு செய்துள்ளனர். மேலும் உள்ள 28 ஆயிரத்து 428 எக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் முறையில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். பாலையூர், பெருங்கடம்பனூர், ஆழியூர், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூர், பூவைத்தேடி, திருமணங்குடி, தேமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் குலைநோய், ஆனைக்கொம்பன், புகையான் தாக்குதல் அதிகளவில் காணப்பட்டது. மேலும் தொண்டை கதிர், பால் கட்டும் பருவத்தில் இருந்த பயிர்களிலும் எலித்தொல்லைகள் அதிகரித்திருந்தது.

இதனால் நெற்பயிர்களை எலிகள் கடித்து வெட்டி நாசம் செய்வதால் விவசாயிகள் தங்களுக்கு இந்த ஆண்டு சுமார் 20 சதவீதத்திற்கு மேல் மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் என வேதனை தெரிவிக்கினறனர். இந்தநிலையில் நாகை, பாலையூர், பெருங்கம்பனூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருமருகல், தேமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு, நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக தொகை கோரும் அறுவடை இயந்திரங்கள் என அறுவடை சார்ந்த பிரச்னைகள் பரவலாக நாகை மாவட்டத்தில் காணப்படுகின்றது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கிய பிரச்னையாக உள்ளது நெல்லின் ஈரப்பதம் ஆகும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 17 சதவீத ஈரப்பதம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால் கடுமையான பனி பொழிவின் காரணமாகவும் நெல்லின் ஈரப்பதம் உயர்ந்தே காணப்படுகிறது.

இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் அறுவடை இயந்திரங்களைக் கொண்டே நெல் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சில இடங்களில் விவசாயத் தொழிலாளர்களைக் கொண்டும் அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றது. இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லில் குறைந்தபட்சம் 19 சதவீத ஈரப்பதம் தவிர்க்க இயலாததாக உள்ளது. அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல் மணிகள் சராசரியாக 16 சதவீத ஈரப்பதத்துடன் இருப்பது வழக்கம். இயந்திர அறுவடையின்போது வைக்கோல் பிழியப்பட்டு, வைக்கோலின் ஈரப்பதம் நெல்மணிகளை சென்றடைவதால், நெல்லின் ஈரப்பதம் 19 சதவீதத்தை எட்டுகிறது. எனவே தமிழக அரசு நெல்லின் ஈரப்பத சதவீதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதலுக்கு அனுமதிக்க வேண்டும்.

Tags : Nagai ,district ,Samba ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...