×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு ஊட்டி,கூடலூர்,குன்னூரில் மனித சங்கிலி போராட்டம்

ஊட்டி, ஜன.31: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனித சங்கிலி நடந்தது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். எனினும், இச்சட்டத்தை நாடு முழுவதும் கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதியாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஊட்டியில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஊட்டியில் மனித சங்கிலி போராட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நடந்தது. இதில், சி.பி.எம். மாவட்ட செயலாளர் பாஸ்கரன், அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி ஆஸ்ரா, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். கூடலூர்: கூடலூரில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் துவங்கி புதிய பேருந்து நிலையம் வரை மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்.,சி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், ம.தி.மு.க., அ.ம.மு.க., மனிதநேய மக்கள் கட்சி மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து காந்தி திடலில் நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் தி.மு.க. சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்  லியாகத் அலி, காங்கிரஸ் கட்சி ஷாஜி, அம்சா, முஸ்லிம் லீக் ஹனிபா, விடுதலை சிறுத்தைகள்  சகாதேவன், சி.பி.ஐ. குணசேகரன், சி.பி.எம். வாசு, குஞ்சு, முகம்மது, மனிதநேய மக்கள் கட்சி சாதிக் பாபு உள்ளிட்ட பலர் பேசினர்.

குன்னூர்: குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய மனித சங்கிலி பேரணியை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்துரை துவக்கி வைத்தார். முகமது முஷா, மன்சூர் அலி, அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்றோர் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் தி.மு.க. நகர செயலாளர் ராமசாமி மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Human Rights Movement ,Cuddalore ,Coonoor ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!