×

குன்னூரில் விதிமுறை மீறி பாறைகள் உடைப்பு

குன்னூர், ஜன.31: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில்  ஓடை மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து  பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் நீராதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது போன்ற விதி மீறல் கட்டிடங்களை அதிகாரிகள்  சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அரசியல் தலையீட்டால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல இடங்களில்  மறைமுகமாக பாறைகள் உடைக்கப்பட்டு அங்கு  காட்டேஜ் மற்றும்  கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு  முன் வண்டிச்சோலை பகுதியில் பாறைகளை உடைத்து கட்டிடங்கள் கட்டி வந்தனர். தற்போது  குன்னூர்  நகரின் மத்தியில் உள்ள புளூ ஹில்ஸ் பகுதியில்  சிறிது சிறிதாக பாறைகளை வெட்டி அகற்றி வருகின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் ஜீப் மூலம் அவற்றை எடுத்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குன்னூர் நகரில் மத்தியில் உள்ள  பகுதியில்  பாறைகள் உடைத்து வரும் சம்பவம்  பொது மக்களிடையே  பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குன்னூர்  பகுதியில் விதிமுறை மீறி  நடைபெற்று வரும் இது போன்ற சம்பவங்களை அதிகாரிகள் தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அதிகாரிகளை கொண்டு அப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு பாறைகள் உடைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம்  இது போன்று  விதிமுறை மீறி பாறைகளை உடைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Breaking ,Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...