×

70 தற்காலிக வீடுகள் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியது

ஊட்டி,ஜன.31:  நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும். இதனால், இச்சமயங்களில் மரங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்படும். அதேபோல், மண் சரிவுகள் ஏற்படும். இது போன்ற மண் சரிவுகள் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும்போது, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோன்று அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வட கிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதனால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படும். இச்சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகள், மலைச் சரிவுகளில் வீடுகள் கட்டியுள்ள மக்கள், நீரோடைகளை ஒட்டி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

கன மழையின்போது, இவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனினும், அந்த முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்க முடிவதில்லை. காரணம், பெரும்பாலான முகாம்கள் அரசு பள்ளிகளே. மழை ஓய்ந்த பின்னரும், பொதுமக்களை இடம் மாற்றம் செய்ய முடியாத நிைலயில் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  அதேசமயம், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியாத நிலையில், பொதுமக்களும் வீடுகளுக்கு திரும்ப முடிவில்லை. இதனால், மழை காலங்களில் பாதிக்கும் மக்களை தற்காலிகமாக மாற்றுவதற்கு, அதாவது நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களை தற்காலிகமாக குடியிருப்புகளுக்கு மாற்றி, அவர்களை தங்க வைப்பதற்காக தற்போது குடியிருப்புகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஊட்டி அருகேயுள்ள எமரால்டு பகுதி தேர்வு செய்யப்பட்டது.

எமரால்டு காந்திகண்டி பகுதியில் ரூ.49 லட்சம் செலவில் 70 வீடுகள் தற்போது கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இனி வரும் காலங்களில் இந்த தற்காலிக வீடுகளில் மழைக்காலங்களில் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பள்ளி மாணவர்கள் பாதிக்க வாய்ப்பில்லை. அதேசமயம், மழை ஓயும் வரை இவர்களும் நிவாரண முகாம்களில் (தற்காலிக வீடுகள்) தங்க வைத்து மழை ஓய்ந்த பின் அனுப்ப முடியும், என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

Tags : homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை