×

புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

கோவை, ஜன.31: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மதுக்கரையில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது: கோவை மாவட்டத்தில் மொத்தம் 16 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 13 சார்பதிவாளர் அலுவலகங்கள் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் ரூ.72.21 லட்சம் மதிப்பிலும், மதுக்கரை சார்பதிவாளர் அலுவலகம் ரூ.93.2 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.1.65 கோடி மதிப்பில் 2 பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களை திறந்து வைத்துள்ளார்.  

தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகமானது 1982ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இவ்வலுவலகத்தில் சுமார் 9 ஆயிரம் ஆவணங்களும், 12 ஆயிரம் வில்லங்க சான்றிதழ்களும், 3 ஆயிரம் சான்றிட்ட நகல்களும் வழங்கப்பட்டு வருகின்றது. தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.45 கோடி வருவாய் ஈட்டித் தருகின்றது. கிராமங்களை ஆட்சி எல்லையாக கொண்டு செயல்பட்டு வரும் இவ்வலுவலகமானது ஆரம்ப நாள் முதல் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது. அதுபோலவே ரூ.93.2 லட்சம் மதிப்பில் சிங்காநல்லூர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டும் பணியும் கடந்த 24ம் தேதி துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அப்பணிகளும் நிறைவு பெறுகின்றபோது மாவட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் அரசு கட்டிடங்களிலே செயல்படுகின்ற நிலை ஏற்படும்.

கோவை மாவட்டம் முழுவதும் செயல்படும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் மூலம் மாதம் ஒன்றிற்கு ரூ.110 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. மேலும் கோவை மாவட்டத்தில் முதல்வரால் இன்று (நேற்று) காணொளி காட்சி மூலம் ரூ.1.55 கோடி மதிப்பில் விதை மற்றும் சான்றுகள் துறை அலுவலகத்தினையும், ரூ.1.28 கோடி மதிப்பில் அரசினர் பொறியியல் கல்லூரியில் தேர்வுத்துறை கூடுதல் கட்டிடத்தையும், ரூ.1 கோடி மதிப்பில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும், ரூ.93 லட்சம் மதிப்பில் நாயக்கன்பாளையம் பகுதியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான அரசு நல விடுதி, ரூ.72 லட்சம் மற்றும் ரூ.69 லட்சங்களில் கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 2 கூடுதல் கட்டிடங்களும் என மொத்தம் ரூ.7.8 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ஜெகதீசன், கோவை மாவட்ட உதவி பதிவுத்துறை  தலைவர் சுரேஷ்குமார், தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் மோகன்குமார், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Delegation Office ,
× RELATED போக்குவரத்துக்கு அனுமதி...