×

கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க கோரி மாநகராட்சி லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

ஈரோடு, ஜன.31: ஈரோடு மாநகராட்சி வ.உ.சி.பூங்கா செல்லும் பகுதியில் வீரபத்திர வீதி உள்ளது. இந்த வீதியில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, குழாய் அமைக்கப்பட்டு திருமண மண்டபங்கள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வரும் குழாய் உடன் இணைத்துள்ளனர். ஆனால், பாதாள சாக்கடை குழாய்களுடன் மெயின் குழாய்களை இணைக்காததால் பாதாள சாக்கடை இணைப்பு பகுதியில் உள்ள மூடி உடைந்து அதன்வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், கடந்த 3 மாதமாக அப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அப் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் மூடியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உறிஞ்சி எடுப்பதற்காக வந்த மாநகராட்சி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஏற்கனவே கொடுக்கப்பட்ட இணைப்புகளை மீண்டும் செப்டிக் டேங்கில் இணைக்கவும், பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கப்பட்ட பிறகு மற்ற குழாய்களை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரத்தில்...