×

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று துவக்கம்


சென்னிமலை, ஜன.31: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா இன்று (31ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து, பகல் 12 மணிக்கு மலைக்கோயிலில் உள்ள கொடிமரத்தில் சேவல் கொடி ஏற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நடைபெறுகிறது. பிப்.1ம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நடக்கிறது. பிப்.2ம் தேதி இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியும், பிப்.3ம் தேதி காலை முதல் இரவு வரை பல்வேறு தரப்பினரின் மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும் நடக்கிறது.  4ம் தேதி இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக்காட்சி நடைபெறுகிறது. 5ம் தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனக்காட்சி நடைபெறுகிறது. 6ம் தேதி மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும் நடக்கிறது. பிப்.7ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணம் நடக்கிறது.

தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 8ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு மேல் கைலாசநாதர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இதில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து, தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தேரை இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. அன்று இரவு 8 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9ம் தேதி மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு நாதஸ்வர கச்சேரி நடைபெறுகிறது. 10ம் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பக்தி இன்னிசை மற்றும் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.

Tags : festival ,Chennimalai Murugan Temple ,
× RELATED தேசிய ஊட்டச்சத்து மாத விழா