×

ஆற்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவுதினத்தையொட்டி தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

* கலெக்டர் துவக்கி வைத்தார்


ஆற்காடு, ஜன. 30: ஆற்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவுதினத்தையொட்டி நடந்த தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் நினைவு தினம் தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மக்கள் மத்தியில் தொழு நோய் பற்றிய அச்சத்தையும், அறியாமையையும் போக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆற்காடு அண்ணா சிலை லட்சுமணன் பூங்கா அருகில் தேசிய தொழு நோய் ஒழிப்பு தினம் முன்னிட்டு தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் ச.திவ்யதர்ஷினி தலைமை தாங்கி தொழுநோய் `ஸ்பர்ஷ்'''' விழிப்புணர்வு குறித்து கையெழுத்திட்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.டி. சுரேஷ், குடும்ப நல துறை துணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், காசநோய் துணை இயக்குனர் டாக்டர் பிரகாஷ் ஐயப்பன், தொழுநோய் துணை இயக்குனர்(பொது) டாக்டர் ப்ரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழுநோய் துணை இயக்குனர் அலுவலக மருத்துவ அலுவலர் வெற்றிச்செல்வி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தொழுநோய் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய டாக்டருக்கு விருது வழங்கி, தொழுநோயாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அதனை தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு காந்தியின் கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் நலக் கல்வியாளர் பி.பிச்சாண்டி, நகராட்சி ஆணையர் ஷா.ஷகிலா, ஆற்காடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சிவசங்கரி, ஆற்காடு பிடிஓ எஸ். வெங்கடாசலம், சுகாதார மேற்பார்வையாளர் பிரேம் ஆனந்த், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் மோகனமூர்த்தி, சரண்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஆற்காடு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் திவ்யதர்ஷினி கொடியசைத்து துவக்கி வைத்தார். அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணி வேலூர் மெயின் ரோடு வழியாக பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் தொழுநோய் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர்

Tags : Leprosy eradication awareness rally ,Mahatma Gandhi ,
× RELATED ஆந்திராவில் எஸ்.பி.பி. நினைவாக இசை...