×

ஜோலார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போடுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள்

* அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை, ஜன.30: ஜோலார்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஊசி போடுவதற்காக நீண்டநேரம் காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஜோலார்பேட்டை கோடியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சிறிய அளவில் இருந்ததால் போதுமான கட்டிட வசதி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் கூடிய புதிய மருத்துவ கட்டிடம் அமைக்கப்பட்டது.

இதனால் கர்ப்பிணிகள், சிறு வயது குழந்தைகள், வயதான முதியவர்கள் என தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பழைய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் உள்ளூர் புறநோயாளிகள் அங்குள்ள மருத்துவரை சந்தித்து மருந்து மற்றும் ஊசிக்கான சீட்டுகளை பெற்றுக்கொண்டு ஊசி போடுவதற்காக செல்கின்றனர். அப்போது அங்குள்ள செவிலியர் பல்வேறு பணிக்காக அதே மருத்துவமனையில் வேறு இடத்திற்கு செல்வதால் ஊசி போட்டுக்கொள்ள வரும் குழந்தைகள் முதல் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அங்கு பணிபுரிபவர்களிடம் செவிலியர் எப்போது வருவார் என்று கேட்டதால், அவர்கள் சரியான பதில் சொல்வதில்லையாம். இதனால் செவிலியர் வந்து ஊசி போடும் வரை நீண்ட நேரம் காத்திருந்து ஊசி போட்டு செல்கின்றனராம். இந்த ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 3 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் செவிலியர்களின் அலட்சியத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஊசி போட்டு செல்வால் உள்ளூர் மற்றும் வெளிப்புற நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஊசி போட்டு, மருந்து மாத்திரைகளை வழங்கி அனுப்ப வேண்டும். மருத்துவமனையில் ஆள் பற்றாக்குறை இருந்தால் அதனை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கூடுதலாக செவிலியர்களை நியமிக்க என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,health center ,Jolarpet ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...