×

திருப்பத்தூரில் பரபரப்பு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

* புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்

திருப்பத்தூர், ஜன.30: திருப்பத்தூரில் குடிநீர், கால்வாய் வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தெருவிளக்கு, கால்வாய் வசதி, குப்பைகளை அகற்றுதல், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சியின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 26வது வார்டு கவுதமபேட்டை பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட மக்கள் அங்குள்ள நகராட்சி பொது கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். தனிநபர் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரக்கோரி நகராட்சியிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதேபோல் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் சரிவர குப்பைகளை அகற்றவில்லையாம். பொதுக்கழிப்பறையில் தண்ணீர் பற்றாக்குறையால் துர்நாற்றம் வீசுவதாகவும், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். நகராட்சி ஆணையாளர் சுதாவிடம் புகார் அளிக்க சென்றால், அலுவலகத்தில் இருப்பதில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருவண்ணாமலை- திருப்பத்தூர் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘எங்களை ஒதுக்கப்பட்ட ஒரு தீவு போல் நகராட்சி வைத்துள்ளது. மாவட்டமாக உருவாகியும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் எங்களுக்கு செய்து தரவில்லை. அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்' என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் நகராடசி துப்புரவு பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோரை வரவழைத்து ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. அதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில், ஆணையாளரை சந்திக்க மக்கள் சென்றால் ஆணையாளர் மக்களை சந்திக்க முன்வரவேண்டும். அப்படி செய்ய தவறினால், கண்டிப்பாக ஆணையாளரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


ஆணையாளராக செயல்படும் மேலாளர்

திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சுதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். பொதுமக்கள், ஆணையாளரை பார்க்க செல்ல வேண்டுமென்றால் முதலில் மேலாளர் குணாளன் என்பவரை பார்த்து, அவரிடம் அனுமதி பெறவேண்டுமாம். அவர் அனுமதி அளித்தால்தான் ஆணையாளரை பார்க்கும் சூழல் உள்ளதாகவும், ஆணையாளரைபோல் மேலாளர் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Thiruppathur Thiruvananthapuram Basic Facilities Public Hearing Strike ,
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...