×

வேலூர் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் நடைபயிற்சிக்கு 8 வடிவ கூழாங்கல் நடைபாதை

வேலூர், ஜன.30: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் நடை பயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் 8 வடிவிலான கூழாங்கல் நடைபாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், பொது மருத்துவம், மகப்பேறு, கண், மூக்கு, தொண்டை, தோல்நோய் ஆகியவை தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. நோய் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஆய்வுக்கூட வசதியும் உள்ளது.

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக கர்ப்பிணிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் அதிகளவில் சிகிச்சைக்கு வந்து செல்வதால் அவர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதற்கான முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்கள் நல்வாழ்வு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது. கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 வடிவிலான நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 வடிவிலான கூழாங்கல் நடைபாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன் கூறுகையில், ‘நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்கள் நல்வாழ்வு மையங்களாக செயல்பட உள்ளது.

காட்பாடி, தொரப்பாடி, அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, கொணவட்டம், சத்துவாச்சாரி, பள்ளிகுப்பம், அலமேலுமங்காபுரம், கஸ்பா, லட்சுமிபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த 8 வடிவிலான கூழாங்கல் நடைபாதை அமைகப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் 8 வடிவ கூழாங்கல் நடைபாதை பயனுள்ளதாக இருக்கும். நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கூழாங்கல் பாதையில் வெறும் காலில் நடக்க வேண்டும். இதன் மூலமாக கர்ப்பிணிகளின் உடல் இயக்கம் சீராக இருக்கும்’ என்றார்.

Tags : walkway ,women ,Vellore Corporation Urban Primary Health Centers ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது