×

போதிய இடவசதி இல்லாத முசிறி உழவர் சந்தை வெளிப்பகுதியில் கடைகள் அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு

முசிறி, ஜன.30: முசிறி உழவர் சந்தையில் போதிய இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளிப்பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் தரைக்கடை போட்டு வியாபாரம் செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. முசிறியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த உழவர் சந்தை திமுக ஆட்சி காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களின் நலனிற்காக கொண்டுவரப்பட்டது. இங்கு முசிறியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகளையும், வியாபாரிகளும் பொதுமக்களிடையே தினசரி விற்பது வழக்கமாக உள்ளது. தற்போது முசிறி நகர மக்களின் பெருக்கத்தால் உழவர் சந்தையில் வியாபாரிகள் போதிய இடவசதி இன்றி பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து முசிறியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், முசிறியில் இயங்கும் உழவர் சந்தையில் வியாபாரம் செய்வதற்கு முதல்நாளே அனுமதி சீட்டு பெற வேண்டும். இவ்வாறு அனுமதி சீட்டு பெறும் வியாபாரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வியாபாரம் செய்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் நிர்வாகத்தினர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து தரும் இடத்தில் வியாபாரம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் உழவர் சந்தையில் போதிய இடவசதி இல்லாமல் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்.

இது தவிர உழவர் சந்தையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் வெளிநபர்கள் வெளியில் கடைகள் போட்டு வியாபாரம் செய்ய கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் முசிறி உழவர் சந்தையின் முன்பு உள்ள சாலைகளின் இருபுறமும் ஏராளமான கடைகள் செயல்படுகிறது. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு உழவர் சந்தைகள் முறையாக அனுமதி சீட்டு வாங்கி வியாபாரம் செய்யும் விவசாயிகளும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் நிலையை கருத்தில் கொண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் விவசாயி கந்தசாமி என்பவர் கூறியதாவது, விவசாயம் மிகவும் நலிவடைந்த நிலையில் சிரமப்பட்டு பயிரிட்ட விவசாய விளைபொருட்களை உழவர் சந்தையில் கொண்டு வந்து விற்கிறோம். ஆனால், உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கு கடைகள் போதிய அளவு இல்லை. இடவசதி இருக்கும் நிலையில் கூடுதலாக கடைகள் கட்டித்தர வேண்டும். மேலும் காய்கறிகளை பதப்படுத்தி வைப்பதற்கு குளிர்சாதன கிடங்கு அமைத்துக் கொடுத்தால் மிகுந்த உதவியாக இருக்கும். இது தவிர முசிறி உழவர் சந்தை பிரதான சாலையில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உழவர் சந்தை முன்பாக இருசக்கர வாகனங்கள் கார், வேன் லோடு ஆட்டோக்கள் நிற்பதால் இவ்வழியே வாகனத்தில் செல்வோர் பெரும் சிரமப்பட வேண்டியுள்ளது. பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே உழவர் சந்தைக்கு காய்கறிகளை வாங்க வருபவர்களும், விற்க வருபவர்களுக்கும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்.

உழவர் சந்தைக்கு செல்ல பிரதானமாக ஒரு நுழைவாயில் மட்டும் இருப்பதால் வந்து செல்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே உழவர் சந்தைக்கு கூடுதலாக வாயில்களை அமைத்துத் தரவேண்டும். முசிறியை சுற்றி உள்ள பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு காய்கறிகள் வாங்கவும், உணவகங்கள், திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிட ஏராளமான மக்கள் வந்து செல்லும் இடத்தில் தேவையான வசதிகளை மேம்படுத்தி தருவது அரசின் கடமை ஆகும். மேலும் உழவர் சந்தை முன்பாக விதிகளை மீறி கடைகளை வைத்திருப்பவர்களின் கடைகளை அப்புறப்படுத்த வேளாண்மை விற்பனை குழுவிற்கு சப்-கலெக்டர் உத்தரவிடவேண்டும். விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உழவர் சந்தையில் உரிய வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : farmer's market ,Musiri ,
× RELATED சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு