×

பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம், ஜன. 30: கும்பகோணம் பாலக்கரை அருகில் உள்ள எம்எம்ஆர் நகரில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் உடைந்து சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடியது. இதனால் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு பரவும் அபாயநிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர், நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் வந்து பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பை சரி செய்தனர். ஆனால் அடுத்த சில நாட்களில் மீண்டும் இதே நிலை ஏற்பட்டதால் கழிவுநீரை அருகில் உள்ள வாய்க்காலில் செல்லும் வகையில் வழியை நகராட்சி ஊழியர்கள் ஏற்படுத்தினர். இதனால் வாய்க்கால் முழுவதும் கழிவுநீர் தேங்கியது.

இந்நிலையில் அப்பகுதி முழுவதும் கழிவுநீர் ஆறாக ஓடுவதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதை கண்டித்து நேற்று கும்பகோணம்- சுவாமிமலை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் நகராட்சி பொறியாளர் ஜெகதீசன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது அனைத்து குறைகளும் உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தில் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : administration ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...