×

அரிமளத்தில் அங்கன்வாடி கட்டிட மேற்கூரையில் விரிசல்

திருமயம், ஜன.30: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மயிலாடும்பாறை பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த 25 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி கட்டிடம் பல ஆண்டுகளாக பராரிப்பின்றி கட்டிடத்தில் மேற்கூறையில் மழைநீர் தேங்கி வந்த நிலையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த பருவ மழையின் போது விரிசல் அதிகமானதால் மேற்கூறையில் இருந்து ஆங்காங்கே காங்கிரீட் பூச்சுகள் உடைந்து குழந்தைகள் அருகே விழுந்தது.

மழைநீர் ஒழுகுவதால் குழந்தைகளை பராமரிக்க, சமைக்க, பொருட்களை பாதுகாக்க முடியாமல் ஊழியர்கள் வருகின்றனர். இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். குழந்தைகளை அனுப்பாமல் இருந்தால் அங்கன்வாடியை அரசு மூடிவிடும். இதனால் சுற்றுவட்டார குழந்தைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் சாப்பிட மட்டுமே அங்கன்வாடிக்கு அனுப்புவோம். சேதமடைந்த கட்டிடத்தை சரி செய்ததும் பயமின்றி குழந்தைகளை அனுப்புவதாக தெரிவித்து அனுப்பி வருகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றியுள்ள இடத்தை தனி நபர் ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். இதனால் அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதில் சிரமம் இருந்து வருகிறது. இதுபற்றி பலமுறை அந்த தனிநபரிடம் பேசியும் அவர் விட்டுக் கொடுக்காததால் மயிலாடும்பாறை அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட முடியவில்லை. இதனால் குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுவதோடு பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தைகளின் நலன்கருதி புதிய அங்கன்வாடியை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : building ,Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்