×

நியாய விலைக்கடை விற்பனையாளர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம், ஜன. 30: ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்து இறந்ததாக கூறப்படும் நியாய விலைக்கடை விற்பனையாளர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (59). இவரது மகன் ராஜா (34). இவர் ஆண்டிமடம் அருகே உள்ள ராமன் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலை கடையில் விற்பனையாளராக உள்ளார். இவருக்கு கவுரி என்ற மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தேடி ஓலையூர் கிராமத்துக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து ராஜாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் கிராமத்தில் வயலுக்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றில் ராஜா இறந்து கிடந்தார். இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை பிரேத பரிசோதனை செய்யவில்லை.

மேலும் ராஜாவின் இறப்பில் மர்மம் உள்ளது. அவரது சாவுக்கு காரணமானவர்களை கண்டு பிடிக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் அரசு மருத்துவமனை முன் ராஜாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ் பாபு, ரவிச்சந்திரன், ராஜசேகர் உள்ளிட்ட பலர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து ராஜாவின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டத்தில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Relatives ,death ,price vendor ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு