×

கந்தூரிவிழாவை முன்னிட்டு நாகூரில் அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து தர வேண்டும்

நாகை, ஜன.30: நாகூரில் ஆண்டவர்தர்கா கந்தூரி விழா நடந்து வருவதால் அடிப்படை வசதிகளை நாகை நகராட்சி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த ஆண்டிற்கான கந்தூரி விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 4ம் தேதி சந்தனம்பூசும் விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாகூர் நோக்கி ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ், ரயில்கள் வழியாக வந்து செல்கின்றனர்.

ஆனால் நாகூர் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி நாகை நகராட்சி நிர்வாகம் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக நாகூரை சுற்றி போதுமான அளவிற்கு கழிவறை வசதிகள் செய்து தரப்படவில்லை. நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து நாகூர் 5 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. அப்படி இருக்கும் போது நாகையில் இருந்தே சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கலாம். கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா நடைபெறும்போது தஞ்சையில் இருந்தே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

அதுபோல் தற்போது நடைபெற்று வரும் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவினை முன்னிட்டு நாகையில் இருந்தே அடிப்படை வசதிகளை செய்து தந்தால்தான் சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி நாகூர் தர்கா சென்று வரமுடியும். மேலும் தர்காவை சுற்றி போதுமான தூய்மை பணிகளை நாகை நகராட்சி செய்யாமல் உள்ளதால் அதிக அளவில் கழிவுநீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றனர். எனவே நாகை நகராட்சி நிர்வாகம் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் நலன்கருதி கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் பகுதியில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Municipalities ,facilities ,festival ,Nagore ,Gandhori ,
× RELATED கோடைகாலம் என்பதால் குடிநீரை...