×

பொதுமக்கள் கோரிக்கை குத்தாலம் பகுதியில் தொடரும் மணல் கொள்ளை

மயிலாடுதுறை, ஜன.30: மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் பகுதியில் மணல்கொள்ளை அவ்வப்பொழுது நடைபெற்று வந்தாலும் போலீசார் அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மணல் கொள்ளையின்போது கைப்பற்றப்படும் வாகனத்தை உடனடியாக விடுவிக்க முடியாது. உயர்நீதிமன்ற படிக்கட்டு ஏறி படாதபாடு பட்டுதான் வாகனத்தை மீட்க முடியும். மணல்கடத்தலின்போது பிடிபடும் நபர் அல்லது தப்பியோடும் நபர்மீது திருட்டு வழக்கு மற்றும் கனிமவளதுறை பாதுகாப்புச்சட்டமும் பாய்கிறது.

பிடிபட்ட நபர் ஜாமீனில் வருவதற்கே மாதக்கணக்கில் ஆகிவிடுகிறது. ஏற்கனவே மணல் ஏற்றிய லாரி பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் கட்டிவிட்டு வாகனத்தை எடுத்துச்செல்வது வாடிக்கையாக இருந்ததால் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் மணல்கொள்ளையில் ஈடுபடும் வாகனத்தை நீதிமன்றம் மூலம் மட்டுமே திரும்ப பெற முடியும் என்பதால் அதிக அளவில் மணல் திருட்டு இல்லாமல் குறைந்து வந்தது.

தற்பொழுது கோடைகாலம் துவங்கியுள்ளதால் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்துள்ளது. மணல்குவாரிகள் துவங்க நீதிமன்றம் குறுக்கே உள்ளது. எம்சாண்ட் மணல் வைத்து வீடுகட்ட அனைவரும் முன்வருவதில்லை. இதனால் திருட்டு மணலாக இருந்தாலும் பராவயில்லை என்று 2 யூனிட் அளவு கொண்ட ஒரு லாரி மணல் ரூ.30,000 முதல் ரூ.50 ஆயிரம்வரை என்ற விலைக்கு விற்பனையாவதால் துணிந்து மணல்கடத்தலில் ஆசாமிகள் இறங்கியுள்ளனர். பொதுவாக கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவது வாடிக்கை. தற்பொழுது பாசன ஆறு வாய்க்கால்களில் தண்ணீர் குறைந்ததாலும், சில ஆறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதாலும் திருட்டு மணல் அள்ளுவதற்கு ஆறுகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் குத்தாலம் அஞ்சாறுவார்தலை என்ற இடத்தில் திருட்டுமணல் ஏற்றிச்செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 2 யூனிட் ஆற்றுமணல் ஏற்றிய லாரி ஒன்றை பிடித்தனர். அதன் ஓட்டுனர் கோமல் பிலாலி தேவராஜ் மகன் மணிகண்டன்(22) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சிறிது தூரத்தில் மேலும் ஒரு லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியிலும் 2 யூனிட்டுக்கு மேல் ஆற்றுமணல் இருந்தது. லாரி ஓட்டுனர் மாப்படுகை செல்லப்பா மகன் பாலமுருகன்(38) என்பவரையும் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் ஒன்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

போலீசார் தேடிச்சென்றபோது சேண்டிருப்பு பகுதியில் கடத்தல் மணலுடன் லாரி ஒன்று பிடிபட்டது. அதன் ஓட்டுனர் மாப்படுகை மாதவன் என்பவரை கைதுசெய்தனர். மூன்று நபர்களையும் திருட்டு மற்றும் கனிமவளத்துறை தடுப்புச்சட்டப்படி கைதுசெய்து காவலில் அடைத்தனர். பொதுவாக கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவது வாடிக்கை. தற்பொழுது பாசன ஆறு வாய்க்கால்களில் தண்ணீர் குறைந்ததாலும், சில ஆறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதாலும் திருட்டு மணல் அள்ளுவதற்கு ஆறுகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

Tags : Kuttalam ,area ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு