×

பழுதடைந்த கூடைப்பந்து வளாகம் விரைந்து சீரமைக்கப்படுமா?

கரூர், ஜன. 30: கரூர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கூடைப்பந்து வளாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் தாந்தோணிமலையில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தடகளப் போட்டிகள், கூடைப்பந்து போட்டி, கால்பந்து போட்டி போன்ற போட்டிகள் நடைபெறும் வகையில் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தின் தரைப்பகுதி முழுதும் விரிசல் கண்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், கூடைப்பந்தின் மேற்புற பகுதியான பந்துகள் போடப்படும் கண்ணாடி கூண்டும் விரிசல் கண்ட நிலையில் உள்ளது.

இதனை சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என ஒரு ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் கூடைப்பந்து திடலுக்கு வந்து பயிற்சி மேற்கொண்டு செல்கின்றனர். மேலும், அவ்வப்போது மாவட்ட அளவிலான போட்டிகளும் இதில் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பழுதடைந்த நிலையில் உள்ள கூடைப்பந்து மைதானத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். துறை அதிகாரிகள் இந்த மைதான திடலை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்