×

தூத்துக்குடியில் பிப்.2ம் தேதி கையெழுத்து இயக்க ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்பி பங்கேற்பு

தூத்துக்குடி, ஜன. 30: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்.2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடந்தது. திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய பாஜ அரசு, நாடாளுமன்றத்தில் பலம் இருக்கிறது என்ற காரணத்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மக்கள் மத்தியில் பயத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்துகிறது. மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டை கொந்தளிக்கும் சூழ்நிலைக்கு அதிமக கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் 1 கோடி கையெழுத்து வாங்கும் இயக்கம், வருகிற 2ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் கையெழுத்துகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது, என்றார்.

கூட்டத்தில் காங். துணை தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், மாநகர் மாவட்ட காங். தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டி, கருப்பசாமி, செல்வராஜ், சின்னமாரிமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மீராசா, மதிமுக இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மமக சம்சுதீன், தவாக கிதர்பிஸ்மி, திராவிடர் கழகம் பெரியாரடியான், சமத்துவ மக்கள் கழகம் கண்டிவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags : Signature Running Advisory Meeting ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!