×

பள்ளி வேன் மோதி 2வயது சிறுவன் பலி திசையன்விளையில் உறவினர்கள் திடீர் மறியல்

திசையன்விளை, ஜன.30:  பள்ளி வேன் மோதி 2 வயது சிறுவன் பலியான சம்பவத்தை கண்டித்து திசையன்விளையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திசையன்விளை அருகே தெற்கு பெட்டைகுளத்தைச் சேர்ந்த பெட்டிக்கடை வியாபாரி சுரேஷ் - இசக்கியம்மாள் தம்பதி மகன்கள் மதன் (6), மகேஷ் (2). மதன் அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை 8.30 மணி அளவில் மதன், மகேஷ் ஆகியோர் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது, பள்ளி வேனின் பின்பகுதியில் சிக்கி சிறுவன் மகேஷ் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் இட்டமொழியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் செல்வின் (35) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் மகேஷ் பலியானது குறித்து பள்ளி நிர்வாகம் அவனது பெற்றோரிடம் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதைக்கண்டித்து திசையன்விளை - நாங்குநேரி சாலை நந்தன்குளம் விலக்கு அருகே மகேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை 9.30 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களிடம் திசையன்விளை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர், பாதிக்கப்பட்ட எங்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டனர். இதற்கிடையே நாகர்கோவில் ஆசாரிபள்ளம், அரசு மருத்துவமனையில் சிறுவன் மகேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திசையன்விளைக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடந்தது.

Tags : crashes ,school van ,
× RELATED மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே...