×

தச்சநல்லூர் மேலக்கரையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

நெல்லை, ஜன.30: தச்சநல்லூர் மேலக்கரையில் பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், நெல்லை தொகுதி எம்எல்ஏ மற்றும் தாசில்தார் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இதைதொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். தச்சநல்லூர் மேலக்கரை, நியூ காலனி அழகியநேரி, தாராபுரம் பகுதி மக்கள் நேற்று நெல்லை தொகுதி எம்எல்ஏ., ஏஎல்எஸ்.லட்சுமணனை சந்தித்து அளித்த மனு விபரம்: நெல்லை மாகராட்சி 2வது வார்டு தச்சநல்லூர் மேலக்கரை மற்றும் நியூ காலனி பகுதியில் பலதரப்பட்ட சமூக, இன மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.

இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே தற்போது புதிய டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இது எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் இருந்த மதுக்கடையால் நாங்கள் அடைந்த துன்பம் ஏராளம். மதுபாட்டில்களை வழியில் உடைத்து போடுவதும் வாகனங்களை சாலையில் நிறுத்துவதும் அடிக்கடி நடந்து வந்தன. மேலும் அங்கு புதியதாக மதுக்கடை அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் இருந்து பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவர். மதுக்கடை அமையும் இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தனியார் பள்ளி உள்ளது. எனவே அந்த பகுதியில் அமைக்கப்பட உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை தாசில்தாரை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் திமுக மாநகர பிரதிநிதி காசிமணி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் எல்ஐசி பேச்சிமுத்து, மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் சங்கர், ஓசூர் பெருமாள், பாஸ்கரன், தர்மராஜ், சங்கர குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தச்சநல்லூர் மேலக்கரை, நியூ காலனி அழகியநேரி, தாராபுரம் பகுதி மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Tags : shop ,
× RELATED மது பாட்டில்களை மொத்த விற்பனை...