உயர்மின் கோபுர பணியால் பாதிப்பு அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஜலகண்டாபுரம், ஜன.30: ஜலகண்டாபுரம் அருகே விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வரும் உயர்மின் கோபுர பணிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் இணைந்து கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைத்து வருகிறது. விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜலகண்டாபுரம் அடுத்த சூரப்பள்ளி கிராமம், பள்ளக்கானூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக தர்மபுரி மாவட்டம் இண்டூரிலிருந்து திருப்பூருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கபட்டு வருகிறது. இதனால், பாதிப்பிற்குள்ளாகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட கோரியும், நிலங்களை கையப்படுத்துவதற்கு துணை போகும் காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும் விவசாய சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்தில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜாத்தி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மேவை.சண்முகராஜா உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மாதந்தோறும் வாடகை வழங்குக, 1885ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தந்தி சட்டத்தின் மூலம் வழங்கப்படும் இழப்பீட்டிற்கு பதிலாக 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில எடுப்பு சட்டத்தின் படி இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பவர்கிரிட் நிறுவனத்தின் பொதுமேலாளர் சத்யநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனால், 2 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories:

>