×

சூரியூர் வனகிராமத்தில் வீடுகள் அகற்றப்பட்டதற்கானஆவணங்களை அளிக்க வனத்துறைக்கு உத்தரவு

சேலம், ஜன.30:சேலம் சூரியூர் பள்ளக்காடு வன கிராமத்தில் வீடுகள் அகற்றப்பட்டதற்கான ஆவணங்களை அளிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு ஓய்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள ஜல்லூத்துமலைக்கும், ஜருகுமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சூரியூர் பள்ளக்காடு வன கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் 77 குடும்பத்தினரையும், காப்பு காட்டில் வசிப்பதாக கூறி வெளியேற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி கடந்த 27ம் தேதி அதிரடியாக சூரியூர் வனக்கிராமத்தில் இருந்த 14 குடிசை வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

இதனிடையே, குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டது தொடர்பாக சூரியூர் முருகேசன், சேலம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், சூரியூரில் நடந்த சம்பவ குறித்து  வன அதிகாரிகளிடம் விசாரித்து, அதற்கான நகலை பெற்றும், அங்கு வசித்த நபர்களிடம் உரிய விசாரணையை நடத்திடவும் ஓய்வு பெற்ற நீதிபதி  ராஜாராம் நியமிக்கப்படுகிறார். அவர் விசாரணை நடத்தி, 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும், எனக்கூறியிருந்தார்.

ஒருநபர் கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம், நேற்று முன்தினம் சூரியூர் பள்ளக்காடு வனகிராமத்திற்கு சென்று, குடியிருப்புகள் இடித்து அகற்றியதை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து 2வது நாளாக நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம், மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு சென்று, அதிகாரிகளை சந்தித்து சூரியூரில் உள்ள குடியிருப்புகளை எந்த அடிப்படையில் இடித்து அகற்றினர் என்பதற்கான விளக்கத்தையும், அதற்கான ஆவணங்களையும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கான ஆவணங்களையும், விளக்கத்தையும் தருவதாக அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சூரியூர் காப்புகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. அந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அத்துமீறி யாராவது நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்,’’ என்றனர்.

Tags : Forest Department ,houses ,forest ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...