×

மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் குழப்பம்

கிருஷ்ணகிரி, ஜன.30: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயோ மெட்ரிக் முறையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பதற்காக பயோ மெட்ரிக் முறையை இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. ஆசிரியர்கள் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என மாவட்டம் வாரியாக நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் வராதவர்களுக்கு வேலை நேரத்திற்கு ஏற்ப சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு காலை 9.15 மணிக்குள் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக்கில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே ஆசிரியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த நேரத்தை 9.10 மணியாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இது குறித்து எந்த அறிவிப்பையும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவில்லை. அதனால் வருகையை கால தாமதம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக நேற்று முன்தினம் வாட்ஸ் அப்பில் தகவல் வெளியானது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் வாகனத்தில் சென்ற கொண்டிருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவ்வாறு எந்த கடிதமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பவில்லை என்றார்.

ஆனால் சில தலைமை ஆசிரியர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து விளக்கம் கேட்டு இ-மெயில் மூலம் கடிதம் வந்துள்ளதாக தெரிவித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் இது குறித்து கூறுகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் யாரை காப்பாற்ற இந்த தகவலை பத்திரிக்கையாளர்களிடம் சொல்ல மறுக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் யார், யாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags : schools ,district ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை...