×

சூளகிரி அருகே தந்தையிடம் தகராறு செய்த விவசாயியை கத்தியால் குத்திய பள்ளி மாணவர்

சூளகிரி, ஜன.30: சூளகிரி அருகே விவசாயியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். சூளகிரி தாலுகா நல்லகானகொத்த பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா. இவரது மகன் வெங்கட்ராஜ்(43) விவசாயி. இவரது 17 வயது மகன், அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறான். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, வெங்கட்ராஜ் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த விவசாயி எல்லப்பா(38) என்பவர் தட்டிக்கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது இதை கண்டு ஆத்திரமடைந்த வெங்கட்ராஜின் மகன், அங்கிருந்த கத்தியை எடுத்து எல்லப்பாவை வயிற்றில் குத்தினார்.

இதில் காயமடைந்த எல்லப்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் சூளகிரி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து, வெங்கட்ராஜை கைது செய்தார். மேலும், தப்பியோடிய அவரது மகனை தேடி வருகிறார்.

Tags : Sulagiri ,
× RELATED கோபிச்செட்டிபாளையத்தில் காவல்துறை...