×

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

காரைக்கால், ஜன. 30: காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமிக்கு விவசாயிகள் மனு அனுப்பி உள்ளனர்.  இது தொடர்பாக காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன்,  முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால் பகுதியில் சுமார் 4,500 ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி செய்து தற்போது அறுவடை நடந்து வருகிறது. பருவமழை காலத்தோடும், அளவோடும் பெய்ததால் இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அறுவடை செய்து கொண்டு இருக்கும் பல பகுதியில் குறிப்பாக அத்திபடுகை நெய்வாச்சேரி, பேட்டை பகுதிகளில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.

மேலும் நெல்லின் தரமும் குறைந்து காணப்படுவதால் தனியார் வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய தயங்குகிறார்கள். இதுதவிர தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கும் பிபீடி (ஆந்திரா பொன்னி) ரக நெல் மிகவும் குறைவாகவே கண்டு முதலாகிறது. பதர் அதிகமாக இருக்கிறது இது ஒரு வகையான நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஏக்கருக்கு 30 மூட்டை கிடைக்க வேண்டிய இடத்தில் 18 முதல் 20 முட்டை தான் கிடைக்கிறது. மேலும் எடைக்கு 30 மரக்கால் அளவு நெல் போட்டால் தான் 62.5 கிலோ எடை வருகிறது. அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யாததால் தனியார் வியாபாரிகள் மூலம் விவசாயிகள் நெல்லை விற்று வருகின்றனர்.

மேலும் எம்எஸ்பி விலை விட 250 ரூபாய் குறைவாகவும், மூட்டைக்கு 2.5 கிலோ அதிகமாகும் நெல்லை விவசாயிகள் தனியார் வியாபாரியிடம் விற்று வருகின்றனர். ஆண்டு முழுவதும் பாடுபட்டு கைக்கு வருகின்ற தருணத்தில் நோய் தாக்குதலாலும் மனமுடைந்த விவசாயிகள், தற்போது அரசு கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படாததால் அடிமாட்டு விலைக்கு (5 ஆண்டுகளுக்கு முன்னர் விற்ற விலைக்கு) தற்போது தங்களுடைய நெல்லை விற்று வருகின்றனர். எனவே புதுச்சேரி அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனத்தின் மூலம் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும்  ஒவ்வொரு தொகுதிக்கும் நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Paddy Purchase Station ,
× RELATED எஸ்.குளவாய்பட்டியில் நெல் கொள்முதல்...