×

பெங்களூர் பால் நிறுவனம் போர்க்கொடி புதுவையில் பாண்லே பால் தட்டுப்பாடு

புதுச்சேரி, ஜன. 30: புதுவையில் பாண்லே நிறுவனத்துக்கு பெங்களூர் தனியார் நிறுவனம் வழங்கிய பால் சப்ளை, விலை உயர்வை கூறி திடீரென நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளதால் ஓரிரு நாட்களாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று முதல் முழுசப்ளையையும் அந்நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளதால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.  புதுவை, குருமாம்பேட்டில் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் (பாண்லே) இயங்குகிறது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். உள்ளூரில் மட்டுமின்றி பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநில தனியார் நிறுவனத்திடம் இருந்தும் பாலை கொள்முதல் செய்து பாண்லே பூத்கள், ஏஜெண்டுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாயிலாக பால் பாக்கெட்டுகளை மக்களுக்கு விநியோகித்து வருகிறது.

 2019 இறுதியில் பாண்லே பால் தட்டுப்பாடு நிலை உருவானது. அரசு எடுத்த உடனடி நடவடிக்கையால் ஓரிரு நாளில் இப்பிரச்னை சரிசெய்யப்பட்டது. இதனிடையே பாண்லே மேலாண் இயக்குனர் சாரங்கபாணி நீண்ட விடுப்பில் சென்றுள்ள நிலையில் அங்கு பணிகள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு அன்றாட தேவையில் ஒன்றான பால் சேவையை வழங்கும் பாண்லே நிறுவனத்துக்கு மாற்று அதிகாரி நியமிக்கப்படாததும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

 இந்த நிலையில் புதுவையில் மீண்டும் பாண்லே பால் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓரிரு தினங்களாக பாண்லே பால் சப்ளை இந்நிறுவனத்தால் சரிவர மேற்கொள்ளப்படாத நிலையில் பூத் மற்றும் கடைகளில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் ஆங்காங்கே பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையை பார்க்க முடிந்தது.  பெங்களூரில் பால்விலை உயர்வை காரணமாக வைத்து, தனது கொள்முதல் விலையை ஏற்ற வேண்டுமென பாண்லே நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்த அந்நிறுவனம் வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்காக காத்திருந்த நிலையில் பாண்லே அதிகாரி நீண்ட விடுப்பு காரணமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக நாளை முதல் தனது 25,000 லிட்டர் பால் சப்ளையை பாண்லேவுக்கு நிறுத்த பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் திடீரென முடிவு செய்துள்ளது.

 இந்நடவடிக்கை காரணமாக இன்று முதல் புதுச்சேரியில் பாண்லே பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு பாண்லே நிறுவனம் மூலம் 1 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கி வருகிறது.  இதில் உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் மூலம் 50 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்யும் பாண்லே நிறுவனம் மீதமுள்ள 50 ஆயிரம் லிட்டர் வரையிலான பாலை வெளிமாநில தனியார் நிறுவனமிடமிருந்து கொள்முதல் செய்து வந்தது. இதில் பெங்களூர் நிறுவனம் மட்டும் பால் உயர்வை முன்வைத்து சில நாட்களாக 5 ஆயிரம், 10 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதலை குறைத்ததால் ஓாிரு நாட்களாக லேசான தட்டுப்பாடு நிலவியது.

 நாளை முதல் தனது முழு சப்ளையையும் (25 ஆயிரம் லிட்டர்) நிறுத்தப் போவதாக பெங்களூர் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் முடிவு செய்துள்ள நிலையில், பாண்லே நிறுவனத்தால் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் லிட்டர் வரையிலான பால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.  இதில் பள்ளிகளுக்கு பால் சப்ளை உள்ளிட்ட மற்ற தேவைகளை பூர்த்தி செய்வது போக மீதமுள்ள 55 ஆயிரம் லிட்டர் வரையிலான பால் மட்டுமே மக்களுக்கு அந்நிறுவனத்தால் விநியோகிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பாண்லே பால் தட்டுப்பாடு உறுதியாகி உள்ளது. இன்று முதல் பாண்லே தட்டுப்பாடு மேலும் அடுத்தடுத்து அதிகரிக்கும் என்பதால் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் நடவடிக்கையில் கவர்னரும், முதல்வரும் இறங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Banner milk shortage ,Bangalore Milk Company ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...