×

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆணையரை கிராமமக்கள் முற்றுகை

சிவகாசி, ஜன.30: சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று சிவகாசி யூனியன் ஆணையாளரை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் மாரனேரி கிராமம் உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பட்டாசு தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் காரணமாக வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர முடியாத நிலை இருந்து வருகின்றது. மாரனேரி நடுத்தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடுத்தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு பணிகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சிவகாசி யூனியன் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். யூனியன் ஆணையாளர் வெள்ளைச்சாமியை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட மாரனேரி ஊராட்சி நிர்வாகத்திடம் யூனியன் ஆணையாளர் வெள்ளைச்சாமி தொடர்பு கொண்டு பேசினார். சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : blockade commissioner ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி