×

திருப்புத்தூர் அருகே பரபரப்பு தாழ்வான மின்கம்பி உரசியதில் வைக்கோல் வண்டி தீப்பற்றியது

திருப்புத்தூர், ஜன.30: திருப்புத்தூர் அருகே காரையூரில் வைக்கோல் ஏற்றிவந்த டிராக்டரில் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் தீ பற்றி எரிந்தது. திருப்புத்தூர் அருகே காரையூரில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேற்று வயலில் இருந்து ஒருவர் டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காரையூர் நாடகமேடை அருகில் வரும்போது, அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி வைக்கோல் மீது உரசியுள்ளது. இதில் வண்டியில் இருந்த வைக்கோலில் தீப்பற்றி எரிந்தது.

இதை கவனித்த டிராக்டரை ஓட்டிவந்த வாலிபர் வண்டியை விட்டு இறங்கி எரிந்த கட்டுகளை மட்டும் கீழே தள்ளிவிட்டார். இதில் சுமார் 40 கட்டுகள் எரிந்து சேதமானது. பின்னர் இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் திருப்புத்தூர் தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சடையப்பன் தலைமையில் வீரர்கள் சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த வைக்கோலை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை சம்மந்தப்பட்ட மின்துறை அலுவலர்கள் உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruputhur ,
× RELATED திருப்புத்தூர் அருகே சாலையோர...