×

பாண்டி கோயிலுக்கு தற்காலிக உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி, ஜன. 30: மதுரை பாண்டி முனுசாமி கோயில் விவகாரத்தில் நடைமுறைகளை கண்காணிக்க அறங்காவலர் தரப்பில் இருந்து தற்காலிகமாக 5 உறுப்பினர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது பாண்டி முனுசாமி கோயில். இது 300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் அறங்காவலர் தரப்பில் உள்ளவர்களே பூசாரியாகவும் இருப்பதால் பக்தர்கள் மூலம் தரப்படும் காணிக்கை பணத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில், ‘கோயிலில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை எடுக்கக்கூடாது என்றும், அறங்காவலர் கட்டுப்பாட்டில் இல்லாமல் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டியிருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அறங்காவலர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘மதுரை பாண்டி முனுசாமி கோயில் விவகாரத்தில் குடும்ப அறங்காவலர் தரப்பில் இருந்து தற்காலிகமாக 5 உறுப்பினர்களை நியமிக்கலாம். இவர்கள் கோயில் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக கண்கானிப்பார்கள். இதில் நிரந்தர உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக அடுத்த 4 மாதத்தில் இறுதி முடிவை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் கோயிலுக்கு பக்தர்களால் அளிக்கப்படும் காணிக்கை தொகை விவகாரத்தை பொறுத்தமட்டில் பக்தர்கள் தரப்பில் இருந்து எந்தவித புகாரும் வராத பட்சத்தில் அதனை எடுத்துச்செல்ல எந்தவித தடையும் கிடையாது’’’’ என உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court Action Order ,Pandey Temple ,
× RELATED நல வாரிய உறுப்பினர் அல்லாத முடி...