×

தைப்பூசத் திருவிழா பழநியில் 2 பஸ் நிலையம் அமைக்க முடிவு

பழநி, ஜன. 30: தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு பழநியில் 2 பஸ் நிலையங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா. இவ்விழா வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை முறையே 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக பல்வேறு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இட நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு பழநி பஸ் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது.  இதன்படி தற்போதுள்ள வ.உ.சி. மத்திய பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, கோவை வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்படும். நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஏற்படுத்தப்பட உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் கிழக்கு பகுதியான திண்டுக்கல், மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் வழித்தட பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வரும் பஸ், புளியம்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எப்.ரோடு வழியாக வந்தடையுமாறு போக்குவரத்து மாற்றப்பட உள்ளது. பாதயாத்திரை பக்தர்களின் வருகையை பொறுத்து விபத்து ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஒட்டன்சத்திரம்-பழநி சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, ஒருவழிப்பாதையாக மாற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Tags : bus stand ,festival ,Thaipoosath ,
× RELATED மிஸ்கூவாகமாக சென்னை திருநங்கை தேர்வு