×

தமிழக அரசு மெத்தனத்தால் கொடைக்கானல் தங்கும் விடுதிகள் திறப்பதில் தாமதம் பழநி எம்எல்ஏ செந்தில்குமார் குற்றச்சாட்டு

கொடைக்கானல், ஜன. 30:  தமிழக அரசின் மெத்தனம் காரணமாகவே கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் திறக்கப்படவில்லை என பழநி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் குற்றம் சாட்டியுள்ளார். கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் அலுவலக திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு பழநி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி துணைத் தலைவர் முத்துமாரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, நகர செயலாளர் முகமது இப்ராகிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்லத்துரை, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்எல்ஏ செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: வனவிலங்கு சரணாலயம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விரிவாக்கப்படுவதால் வனத்தை ஒட்டிய நிலப் பகுதிகளை வனப்பகுதிகளாக விரிவாக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில்தான் மச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு வனத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது மக்களுக்கு அச்சம் தரும் நிலையில் உள்ளது. கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் யானைகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது. 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட மலைப் பகுதிக்கு கீழ் பகுதிகளிலும் யானைகள் தொந்தரவு தொடர்கிறது.

வனத்துறை அமைச்சரும், முதன்மை செயலாளரும் மற்றும் வனத்துறையினரும் யானைகள், மக்கள் வசிக்கும் பகுதிக்கு வராத வண்ணம் நிரந்தரமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொடைக்கானலில் 304 தங்கும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தற்போது 1, 2 தங்கும் விடுதிகள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல அனைத்து தங்கும் விடுதிகளையும் திறந்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மெத்தனம் காரணமாகவே கொடைக்கானலில் தங்கும்விடுதிகள் திறக்கப்படாமல் உள்ளது. கொடைக்கானல் நகரில் உள்ள தங்கும் விடுதிகளை திறப்பதற்கு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு கூறினார்.

Tags : Palani MLA ,opening ,hostels ,Senthil Kumar ,Kodaikanal ,Government of Tamil Nadu ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு