×

விளை நிலங்களை சேதப்படுத்தாமல் சாலையோரத்தில் மின்பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்

திருப்பூர், ஜன.30: திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை தவிர்த்து சென்னை, கோவை ஆகிய தொழில் நகரங்களில் மின் கம்பிகளை அகற்றி கேபிள் மூலம் மின்பாதை அமைப்பதுபோல் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக மின் பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக மின் கோபுரம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி இழப்புகளும் அதிகளவு உள்ளது.

உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கு நிலங்கள் எடுத்து கொள்ளப்படுகின்றன. இதில் விவசாயம், கட்டுமானங்கள், ஆழ்துளை கிணறுகள் அல்லது கிணறுகள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடும் உள்ளது.  மேலும், மின்பாதை அமைக்கப்படும் நிலங்களுக்கு முழுமையான இழப்பீடும் வழங்கப்படுவதில்லை.  குறிப்பாக நலிவடைந்த விவசாயிகளுக்கு சொற்பத்தொகையே இழப்பீடாக வழங்கப்படுகிறது. சில இடங்களில் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், வேறு சிலருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதில் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் திட்டமிட்டு துரோகம் இழைக்கப்படுகிறது.

இத்தகைய மின் கோபுரத் திட்டங்கள் கேரளாவில் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் மின்சாரக் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. உதாரணமாக புகலூர்- திருச்சூர் மின்பாதைத் திட்டத்தில் 40 கி.மீ. நீளத்திற்கான பாதை சாலையோரம் பூமிக்கு அடியில்தான் செல்கிறது. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும்போதுகூட பூமிக்கு அடியில்தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின் பாதைகளையும் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும்போது குறைந்தபட்சம் 12% இழப்பு ஏற்படும். ஆனால், பூமிக்கடியில் கேபிள் மூலம் கொண்டு சென்றால் மின் இழப்பு ஏற்படாது.

மின் பாதைகள் மட்டுமின்றி, கேரளத்திலிருந்து கர்நாடகத்திற்கு எரிவாயுவை கொண்டு செல்வதற்கான குழாய் பாதையும் வேளாண் விளைநிலங்கள் வழியாகத்தான் அமைக்கப்படுகின்றன. இதனால் சேலம், கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உயர் அழுத்த மின் பாதைகளை வேளாண் விளைநிலங்களில் கோபுரம் அமைத்து கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, சாலையோரங்களில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து மின்பாதைகளை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்

Tags : Central ,State Governments ,roadway ,lands ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...