×

ஆழியார் அணையிலிருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கக்கூடாது

பொள்ளாச்சி, ஜன.30:  பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். தாசில்தார் தனிகைவேல், வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை விகித்தனர். வருவாய்துறையினர், உள்ளாட்சித்துறை, போக்குவரத்து துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:- பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னைகளில் வெள்ளை ஈ தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தாலும். அதனை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான தீர்வு காணாமல் உள்ளது.  இதனால், தென்னையில் தேங்காய் காய்ப்புத்திறன் குறைவதுடன், நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாக உள்ளது.

சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்கள் வழியாக செல்லும் ரோடுகள் பழுதாகி பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் சீர்படுத்தாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, முத்தூரிலிருந்து டி.நலிக்கவுண்டன் பாளையம் மற்றும் ஆர்.பொன்னாபுரம் வரையிலும். தாவளம் ரோடு என பல்வேறு இடங்களில் சாலை சீரமைக்காமல் உள்ளதால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலிருந்து, விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு வர மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி குக்கிராமபுறங்களில் உள்ள சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆழியார் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையிலிருந்து குறிப்பிட்ட டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறக்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.
தண்ணீர் திறப்பின்போது தினமும் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க வேண்டும். ஆனால் கடந்த சில வாரமாக, கேரளாவுக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. உள்ளூர் விவசாயத்துக்கு கூடுதல் நீர் மறுத்து, கேரளாவுக்கு தினமும் கூடுதலாக தண்ணீர் திறப்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஆயக்கட்டு பாசன விளை நிலத்துக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் விநியோகிப்பதை நிறுத்த வேண்டும். இது குறித்து உயர் அதிகரிகள் கண்காணித்து, வரைமுறைப்படுத்த வேண்டும்.

பழைய ஆயக்கட்டு பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டு நல்ல விளைச்சலடைந்த நெல்லை அறுவடை செய்ய, வேளாண் பொறியியல் துறை மூலம் மானியத்தில் கதிர் அறுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கோபாலபுரம், நரசிங்காபுரத்தில் உள்ள தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.  வனப்பகுதி அருகே உள்ள  விவசாய நிலங்களில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்துடன் வாழ வேண்டியதாக உள்ளது. எனவே, வனத்திலிருந்து விலங்குகள் விளை நிலங்களுக்கு வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டோரம் உள்ள நகராட்சி இடத்தில் செயல்பட்ட மாட்டு சந்தை தற்போது, திப்பம்பட்டியில் உள்ள தனியார் இடத்தில் செயல்படுகிறது. இதனால் நகராட்சிக்கு ஆண்டிற்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், வியாபாரிகளே சின்டிகேட் அமைத்து மாடுகளை குறைவான விலைக்கு வாங்குவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனவே, பாரம்பரிய மிக்க மாட்டு சந்தையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Kerala ,Aliyar Dam ,
× RELATED கேரளாவில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி