×

சபரிமலைக்கு இடம் பெயர்ந்து வரும் யானைகள்

வால்பாறை, ஜன.30:  வால்பாறையில் கடந்த 4 மாதமாக முகாமிட்டிருந்த கேரள யானைகள் சபரிமலை நோக்கி இடம் பெயர்ந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை மற்றும் கேரள மாநில எல்லையொட்டிய பகுதிகளில்  மொத்தம் 400க்கும் மேற்பட்ட  யானைகள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட கூட்டமாக உள்ள  இவை ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல், ஆண்டு முழுவதும் 300 கி.மீ. தூரம் இடம்பெயர்வது வழக்கம். இவை பல்வேறு வழித்தடங்களில் இடம் பெயர்ந்து வருகின்றன. ஒவ்வொரு வழித்தடத்திலும்  100 யானைகள் கொண்ட 10 யானை கூட்டம் இடம்பெயர்ந்து வருகின்றன. சுழற்சி அடிப்படையில் இடம்பெயர்வதால் ஒரு யானை  கூட்டம்  மற்றொரு யானை கூட்டத்தை சந்திப்பதில்லை.

யானையின் வழித்தடங்களையும் எந்தெந்த காலங்களில் எவ்வளவு யானைகள்  அப்பகுதிகளை   கடக்கும் என்பதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதன்படி  வால்பாறை பகுதியில் பகுதியில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 100 யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதில் 4 யானை கூட்டம் ஏதாவதொரு பகுதியில் நடமாடி வருகிறது. கடந்த நவம்பர், டிசம்பரில் வழக்கமான யானைகளை விட வால்பாறை பகுதியில் கூடுதலாக 150க்கும் மேற்பட்ட  யானைகளின் நடமாட்டம் ஏற்பட்டது குளிர்கால கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதுகுறித்த மேற்கொண்ட ஆய்வில்,  யானைகள் சபரிமலையில் பக்தர் நடமாட்டம் காரணமாக  கேரளாவின் உள்பகுதி வனத்திற்கு செல்லாமல் திசை மாறி வால்பாறை வரை இடம்பெயர்ந்திருந்தது தெரிய வந்தது.

ஏற்கனவே வால்பாறையில் உள்ள   யானைகளோடு கேரள  யானைகளும் சேர்ந்ததால் வால்பாறையில் கடந்த 3 மாதங்களில் 150க்கும் மேற்பட்ட  யானைகள் 15க்கும் மேற்பட்ட கூட்டமாக நடமாடி, தொழிலாளர் குடியிருப்புகள், தேயிலை தோட்ட அதிகாரிகளின் பங்களாக்கள், வீட்டு தோட்டங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி வந்தன. யானைகளிடம் சிக்கி சிலர் பாதிக்கப்பட்டனர். உயிர் இழந்தும் உள்ளனர். அவற்றை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2 மாதமாக திணறி வந்தனர்.  இந்நிலையில் கடந்த 2 வாரமாக சபரிமலை யானைகள் கூட்டம் படிப்படியாக வால்பாறை பகுதியில் இருந்து மாயமாகி வருகிறது. அவை  சபரிமலை மற்றும் அதையொட்டியுள்ள மலைப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறது என வனத்துறையினர்  உறுதி  செய்து உள்ளனர். யானைகள் இடம் பெயர்வதால் சேதம் குறைந்துள்ளதை தொடர்ந்து, வால்பாறை பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : Endangered Elephants ,Sabarimala ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு