×

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வலியுறுத்தல்

வால்பாறை, ஜன.30:  வால்பாறையை சுற்றி ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. வனப்பகுதிகளில் வசிக்கும் காட்டுப்பன்றிகள் தற்போது ஊருக்குள் புகுந்து விடுகிறது. அவைகளால் பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். வால்பாறை பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட எஸ்டேட்களிலும், நகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ரொட்டிக்கடை, சோலையார் அணை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் காட்டுபன்றிகள் வீட்டு விலங்குகள்போல சர்வ சாதாரணமாக மேய்ந்து வருகிறது.

எனவே வித்தியாசம் தெரியாமல் நோய் பரப்பும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நகராட்சி துப்புரவு துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் காட்டுப்பன்றி தாக்கி சவரன்காடு, லோயர் பாரளை, ரொட்டிக்கடை, வாட்டர்பால்ஸ் பகுதியில் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காயம் அடைந்துள்ளனர். தற்போது வால்பாறை, முடீஸ், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பள்ளி வளாகங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக மேய்வதற்கு வருகிறது. மிஞ்சிய சத்துணவுகளை  ருசிக்க வரும் காட்டுப்பன்றிகளால் அனைவரும் பீதியடைகின்றனர்.

ரேஷன் கடை  பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் வரும் காட்டுப்பன்றிகளால் பொதுமக்கள் பயத்துடன் நடமாடி வருகின்றனர். பன்றிகள் ஊருக்குள் நடமாடுவதால், சிறுத்தைகள் அவற்றை வேட்டையாட ஊருக்குள் வருகிறது. வனத்திற்குள் வளராத காட்டுப்பன்றிகள், குப்பைகளை மேய்ந்து ஊருக்குள் செட்டில் ஆகிவிட்டது. எனவே காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி, பன்றிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். மலை அடிவாரங்களில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள்  மற்றும் யானைகள் சேதம் ஏற்படுத்தி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவது  விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...