×

பாலியல் புகாரை விசாரிக்க உட்புகார்குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை, ஜன.30:   பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை புகார்களை விசாரிக்க உட்புகார்குழு  அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராஜாமணி கூறியிருப்பதாவது: பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் தடுப்பதற்காக பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடை சட்டம் 2013 ஆண்டு முதல் மத்திய அரசால் நடைமுறைபடுத்தப்பட்டது.

இச்சட்டத்தில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உட்புகார்குழு அனைத்து அரசுதுறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் உட்புகார் குழுவின் தலைவராக ஒரு பெண் அலுவலர் நியமிக்க வேண்டும். 2 நபர்களை உறுப்பினர்களாகவும், இத்துறையில் நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராகவும் சேர்க்க வேண்டும் என விசாரணைக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

10 பேருக்கும் குறைவாக உள்ள இடங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டால் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள குழுவிலோ அல்லது அந்த பகுதிக்குட்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலரிடமோ புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் நபரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். கோவை மாவட்டத்தில் இதுவரை பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் 3 புகார் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும் வகையில் மத்திய அரசு www.shebox.nic.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை 4 புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளிலும் உட்புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று  தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 37 உட்புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலிருந்தும் காலாண்டு அறிக்கை பெறப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் உதவி எண் 181 அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 புகார் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவில் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு புகார்தாரர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நபர்கள் குறித்து தெளிவான முகவரியுடன் புகார் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் உட்புகார் குழு அமைத்தும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும் வகையில் உட்புகார் குழு விபரம் மற்றும் மத்திய அரசால் இணையதளத்தில் புகார் அளிக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தினை அனைவரின் பார்வைக்கு படும்படியாக ஒட்டிவைக்க வேண்டும்.

உட்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உட்புகார் குழு அமைப்பது தொடர்பான விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கோவை மற்றும் தொலை பேசி எண் 0422-2305126  மற்றும் பெண்கள் உதவி மையம் எண். 0422-2555126 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு ராஜாமணி கூறினார்.

Tags : companies ,committee ,
× RELATED கொரோனா குறித்த வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை