×

திம்மையன்பேட்டை ஊராட்சியில் பைப்புகள் உடைந்ததால் குடிநீரில் கழிவு நீர் கலப்பு: நோய் பரவும் என அச்சம்

வாலாஜாபாத், ஜன.29: வாலாஜாபாத் அருகே திம்மையன்பேட்டை ஊராட்சியில், வேகவதி ஆற்றில் இருந்து வரும் குடிநீர் பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதில், கழிவுநீர் கலப்பதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் திம்மையன்பேட்டை ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், கிராம நிர்வாக அலுவலகம், கிராம சேவை மையம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த ஊராட்சி மக்களுக்கு குடிநீர் அருகில் உள்ள வேகவதி ஆற்றுப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுபோல் வேகவதி ஆற்றுப் பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் பைப்புகளில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீணாகின்றன. இதுபற்றி பலமுறை ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும், கிராம மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் திம்மையன்பேட்டை ஊராட்சிக்கு வேகவதி ஆற்றுப் பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் கருக்குப்பேட்டை, திம்மையன்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது.

இந்த பைப்லைனில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதுடன், சாலையில் தேங்கி, கழிவுநீரும் அதில் கலக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பைப்லைன் உடைப்பு வழியாக கழிவுநீர் கலப்பதை தடுக்காமல் உள்ளதால், குடிநீருடன், கலந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்து மக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி ஆகியவை ஏற்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கும் ஊராட்சி நிர்வாகத்தால், பல்வேறு மர்ம காய்ச்சல்களும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுகாதார சீர்கேடாக வினியோகிக்கும் குடிநீரை தடுத்து, பைப்லைன்களை சீரமைக்கவும், சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : breakdown ,Dimayanpet ,Panic ,
× RELATED கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர்...