×

அம்மா உணவகம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை ஒருங்கிணைந்த உணவு கூடம் அமைக்க அனுமதி: நிதி திரட்டுவது தொடர்பாக விரைவில் முடிவு

சென்னை: நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைப்பது தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த உணவு கூடம் அமைக்க முதல்வர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. மேலும் தமிழகத்தின் மற்ற இடங்களிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.468 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விற்பனை வருவாயும் குறைந்து கொண்ட இருந்தது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்தை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும் அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

மேலும் சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் 15 நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சாப்பிடுபவர்களின் விவரம், உணவின் தரம், மேம்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரத்து 379 பொதுமக்கள் பங்கேற்றனர். இவர்கள் உணவு வகையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அமைக்கப்பட்ட குழு அம்மா உணவகத்தை மேம்படுத்துவது தொடர்பாக 5 திட்டங்களை செயல்படுத்த பரிந்துரை செய்தது. இதன்படி அம்மா உணவகத்தை நடத்தவும் மேம்படுத்தவும் ஒரு டிரஸ்ட் அல்லது நிதியை உருவாக்குதல், பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை திரட்டுதல், அம்மா உணவகத்தை தத்தெடுத்தல், ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைத்தல் உள்ளிட்ட 5 திட்டங்களை இந்த குழு பரிந்துரைத்து அறிக்கை தயார் செய்தது.

இந்நிலையில் இந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒருங்கிணைந்த உணவு கூடம் அமைக்கும் திட்டத்தின் மற்றும் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதன்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அம்மா உணவகங்களுக்கு தேவையான ஒருங்கிணைந்த உணவு கூட்டத்தில் உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். மேலும் உணவு வகைகளை மாற்றுவது மற்றும் நிதி திரட்டுவதற்காக தனி அறைகளை ஒன்று உருவாக்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனவே, இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : consultation ,restaurant ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...