×

திருச்சியில் பாஜ பிரமுகரை வெட்டிக் கொன்ற கொலையாளிகள் நாகையில் பதுங்கல்? தனிப்படையினர் தேடுதல் வேட்டை

திருச்சி, ஜன.29: திருச்சியில் பா.ஜ. பிரமுகரை வெட்டி கொலை செய்த கொலையாளிகள் நாகையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு தேடி வருகின்றனர். இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று விசாரணை நடத்தினர். திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு(40). பாலக்கரை பகுதி பாஜ மண்டல செயலாளர். காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை விஜயரகு, காந்தி மார்க்கெட் 6ம் எண் கேட்டில் வாகன வசூலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏர்போர்ட் பிலிக்கான் கோயில் தெருவை சேர்ந்த பாபு என்ற மிட்டாய் பாபு(20), அவரது நண்பர் சைக்கோ சங்கர் ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயரகுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலையாளி மிட்டாய் பாபு மீது 15 வழக்குகள் உள்ள குறிப்பிடத்தக்கது.

போலீஸ் விசாரணையில், விஜயரகுவின் மகளை மிட்டாய் பாபு காதலித்ததை அறிந்த விஜயரகு எச்சரித்ததால் கடந்தாண்டு ஏற்பட்ட தகராறில் விஜயரகு, அவரது மைத்துனர் கிருஷ்ணகுமார் ஆகியோரை மிட்டாய் பாபு வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 9ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த மிட்டாய் பாபு மீண்டும் விஜயரகுவிடம் பெண் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயரகு, மிட்டாய்பாபுவை கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மிட்டாய் பாபு, தனது நண்பர் சைக்கோ சங்கருடன் சேர்ந்து விஜயரகுவை கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜு கொலை நடந்த காந்தி மார்க்கெட் 6ம் எண் கேட் பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரித்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளில் உள்ளவர்களிடம் விசாரித்தார். இதற்கிடையே தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த வந்துள்ள தமிழக சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி திருச்சியில் விஜயரகு கொலை குறித்து விசாரித்தார். பின்னர் அவர் தஞ்சை புறப்பட்டு சென்றார். இந்நிலையில் கொலையாளிகள் நாகையில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலின்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், காந்தி மார்க்கெட் எஸ்ஐ ரமேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நாகை சென்று அங்கு முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் நேற்று கொலை செய்யப்பட்ட விஜயரகுவின் வீட்டுக்கு வந்து குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனரிடம் புகார் மனு அளித்து சென்றார்.

Tags : Murderers ,Trichy ,Bajaj ,Individuals ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...