×

தம்பதியிடம் விசாரணை அரிமளம் பகுதியில் மாட்டுத்தீவன சாகுபடியை அதிகாரிகள் ஆய்வு

திருமயம்.ஜன.29: அரிமளம் பகுதியில் மாட்டுத்தீவனம் பயிரிட்டுள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறைக்கு தீர்வு காணும் விதமாக கறவை மாடுகளில் உற்பத்தித் திறன், பசுந்தீவன உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இறவை சாகுபடியில் 100 சதவீத மானியத்தில் நிலையான பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் வகையில் கோ 4 தீவன புல்கரணைகள், 4 சென்ட் தீவன சோளம், 2 சென்ட் மக்காச்சோளம், 2 சென்ட் தீவன தட்டைப்பயறு, 1.5 சென்ட் வேலிமசால், 1.5 சென்ட் ஆக மொத்தம் 10 சென்ட் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய தீவனவிதைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பயனாளி குறைந்தபட்சம் 10 சென்ட் அளவிலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பிலும் சாகுபடி செய்யலாம். பாசனவசதி இல்லாத விவசாயிகளுக்கு மானாவாரியில் தீவனப்புல் உற்பத்திசெய்ய 0.25 ஏக்கர் நிலப்பரப்பிற்கு 3 கிலோ தீவனசோளம், 1 கிலோ தட்டைப்பயறு விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மானாவாரியில் ஒரு பயனாளி குறைந்தபட்சம் 0.25 ஏக்கரிலும் அதிகபட்சமாக 2 ஏக்கர் நிலப்பரப்பிலும் சாகுபடி செய்யலாம்.

இத்திட்டத்தின் கீழ் அறந்தாங்கி,ஆவுடையார்கோவில்,மணமேல்குடி, அரிமளம் ஒன்றியங்களை உள்ளடக்கிய அறந்தாங்கி கோட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் இறவை சாகுபடியில் 60 ஏக்கரும், மானாவரி சாகுபடியில் 300 ஏக்கரும் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீவன விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துரித தீவன அபிவித்தி திட்டத்தின் கீழ் 200 ஏக்கர் அளவிற்கு தீவன மினிகிட் விதைகள் வழங்கப்பட உள்ளது. இதனிடையே புல்நறுக்கும் கருவிகள் 75 சதவீத மானியத்தில் 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட புல்நறுக்கும் கருவிகள், கோ 4 புல்கரணைகள் , கோ எப் எஸ் 29, சிகப்புசாரி தீவன சோள விதைகள் பயிரிடப்பட்ட பயனாளிகளின் இடங்களில் கால்நடை பராமரிப்பு அறந்தாங்கி கோட்ட உதவி இயக்குனர் ரவீந்திரன், கே.புதுப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் நிமலேசன், உதவியாளர் சங்கர் உள்ளிட்ட குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது உதவி இயக்குனர் அவர்கள் தீவனப் பயிர் சாகுபடி முறைகள் மற்றும் கால்நடைகளின் தீவன மேலான்மை குறித்து பயனாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். மேலும் மழைகாலங்களில் மிகுதியாக கிடைக்கும் பசுந்தீவனத்தை பதப்படுத்தி பசுந்தீவன பற்றாக்குறை நிலவும் கோடைகாலங்களில் கால்நடைகளுக்கு வழங்கும் வகையில் சைலேஜ் எனப்படும் ஊறுகாப்புல் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்தும் விளக்கமளித்தார்.

Tags : Investigators ,Arimalam ,
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...